மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று 2-வது நாளாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். பர்கூரில் பிரச்சாரத்தில் அவர் பேசியதாவது:
இது மக்கள் கூட்டம் அல்ல. தமிழகத்தை மாற்ற வந்த கூட்டம்.புதிய அரசியல் மாற்றத்துக்கு மக்கள் தயாராகி விட்டார்கள். வறுமைக் கோட்டுக்கு கீழ் ஏராளமான மக்கள் உள்ளனர். அவர்களை செழுமைக் கோட்டுக்கு மேல் கொண்டு வர வேண்டும். படித்து வேலை இன்றி இளைஞர்கள் பலர் உள்ளனர். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் படித்த இளைஞர்கள் பிறருக்கு வேலை கொடுக்க வேண்டிய அளவுக்கு வாழ்க்கைத் தரம் உயரும். நாங்கள் தற்போது திறன் மேம்பாட்டு மையம் அமைத்து வருகிறோம்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சிறு நகரங்கள்கூட பெரு நகரங்களுக்கு இணையான வசதிகள் அனைத்தையும் பெறும். வீட்டுக்கு ஒரு கணினி வழங்குவோம். இதன் மூலம் மக்களுக்கும், அரசுக்குமான உறவு வலுக்கும். இடைத்தரகர்கள் காணாமல் போய்விடுவார்கள் என்றார்.
ஓசூரில் நேற்று முன்தினம் இரவு பேசிய அவர், ‘‘பெங்களூருவுக்கு இணையாக வளர்ந்திருக்க வேண்டிய ஓசூர் போக்குவரத்து நெரிசலில் சிக்கி சிற்றூராக உள்ளது” என்றார்.