Regional01

நீர்வரத்து குறைந்ததால் புழல் ஏரியிலிருந்து உபரிநீர் திறப்பு நிறுத்தம்

செய்திப்பிரிவு

சென்னைக்கு குடிநீர் தரும் முக்கிய ஏரிகளில் ஒன்றான புழல் ஏரி 3,300 மில்லியன் கன அடி கொள்ளளவும், 21.20 அடி உயரமும் கொண்டது. கடந்த நவம்பர் இறுதி, டிசம்பர் தொடக்கத்தில் பெய்த மழையால் புழல் ஏரியின் நீர் இருப்பு முழு கொள்ளளவை எட்டும் நிலையில் இருந்ததால், கடந்த டிசம்பர் 4 முதல் 8-ம் தேதி வரை உபரிநீர் திறக்கப்பட்டது.

இச்சூழலில், கடந்த ஜன. 4-ம் தேதி இரவு முதல் திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்த கன மழையால் நேற்று முன்தினம் மதியம் புழல் ஏரி நீர்மட்டம் 21.12 அடியாக உயர்ந்தது; நீ்ர் இருப்பு 3,257 மில்லியன் கன அடியானது. ஆகவே, நேற்று முன்தினம் மதியம் 1 மணி முதல் புழல் ஏரியிலிருந்து உபரிநீர் தொடக்கத்தில் விநாடிக்கு 500 கன அடி திறக்கப்பட்டு, அது பின்னர் 1,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. பிறகு, நீர் வரத்தின் அளவை பொறுத்து படிப்படியாக குறைக்கப்பட்டு, நேற்று காலை விநாடிக்கு 250 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டது.

தொடர்ந்து, புழல் ஏரியின் நீர்பிடிப்பு பகுதியில் அதிக மழையில்லாததால், நீர்வரத்து குறைவாக இருந்ததால், நேற்று பகல் 12 மணிக்கு உபரிநீர் திறப்பதை பொதுப்பணித் துறை அதிகாரிகள் நிறுத்தினர்.

மேலும், நீர்வரத்தை பொறுத்து மீண்டும் உபரிநீர் திறக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பூண்டியில் 3,135 மி. கன அடி

3,231 மில்லியன் கன அடி கொள்ளளவும், 35 அடி உயரமும் கொண்ட பூண்டி ஏரியில் நேற்று காலை நிலவரப்படி 3,135 மில்லியன் கன அடி நீர் இருப்பும், நீர்மட்டம் 34.96 அடியாகவும் உள்ளது.

அதே போல், சென்னைக்குடி நீர் தரும் மற்ற ஏரிகளான சோழவரம், கண்ணன்கோட்டை- தேர்வாய் கண்டிகை ஆகியவற்றிலும் நீர் இருப்பு அதிகரித்துள்ளது. 1,081 மில்லியன் கன அடி கொள்ளளவும், 18.86 அடி உயரமும் கொண்ட சோழவரம் ஏரியின் நீர் இருப்பு 881 மில்லியன் கன அடியாகவும், நீர்மட்டம் 17.86 அடியாகவும் உள்ளது. 500 மில்லியன் கன அடி கொள்ளளவும், 36.61 அடி உயரமும் கொண்ட கண்ணன் கோட்டை- தேர்வாய்கண்டிகை நீர்தேக்கத்தின் நீர் இருப்பு 406 மில்லியன் கன அடியாகவும், நீர்மட்டம் 30.10 அடியாகவும் உள்ளது.

SCROLL FOR NEXT