மதுரையில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு முன் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி. படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி 
Regional02

சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன் தேவேந்திரகுல வேளாளர் பொதுப்பெயரை அறிவிக்கவேண்டும் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

தமிழகத்தில் குடும்பன், காலாடி, பண்ணாடி, கடையன், பள்ளன், தேவேந்திர குலத்தான், வாதிரியார் என்ற தேவேந்திர குல வேளாளர் சமூகத்தில் உள்ள 7 உட்பிரிவுகளையும் ஒன்றிணைத்து தேவேந்திர குல வேளாளர் என்ற பொதுப்பெயரில் அரசாணை வெளியிட, மத்திய அரசுக்குப் பரிந்துரைக்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். இந்நிலையில் மத்திய - மாநில அரசுகள் அரசாணையை வெளியிடக் கோரி, புதிய தமிழகம் கட்சி சார்பில், மதுரை பழங்காநத்தத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதையொட்டி மாலை 3 மணிக்கு புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கி வைத்தார். முன்னதாக எல்லீஸ்நகர் - பைபாஸ் சாலை சந்திப்பில் உள்ள பாலத்தில் இருந்து அவர் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார். மாநகர் மாவட்டச் செயலர் தாமோதரன், மாநில பொதுச் செயலர் விகே. அய்யர், இளைஞரணி செயலர் சியாம் கிருஷ்ணசாமி, மாநகர் மாவட்டச் செயலர் தெய்வம் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் கிருஷ்ணசாமி பேசியதாவது:

பட்டியலினத்தவர் பட்டியலில் இருந்து வெளியேறி, தேவேந்திர குல வேளாளர் என பொதுப்பெயரில் மாற்றுவதற்கான இந்த முயற்சி வரலாற்றுச் சிறப்புமிக்கது.

தனித்தொகுதிகளில் வெற்றிபெறும் எம்பி, எம்எல்ஏக்கள் தேவந்திரகுல சமூகத்தினருக்கு பிரச்சினை என்றால் வர மாட்டார்கள். அவர்கள் பதவி ருசிக்கு அடிமையாகி உள்ளனர்.

தேவேந்திர குல சமூகத்தினரின் குரல் அரசுக்கு கேட்கத் தொடங்கியது புதிய தமிழகம் கட்சியால்தான். எங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற எதையும் இழக்கத்தயார். எங்களது பட்டியலின வெளியேற்றத்தால் யாருடைய இட ஒதுக்கீட்டுக்கும் இடையூறு இல்லை.

தேவேந்திர குல வேளாளர் எனப் பொதுப் பெயர் வெளியிட்டு 6 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். பட்டியலிலுள்ள 7 உட்பிரிவுகளையும் ஒன்றிணைத்து, தேவேந்திர குல வேளாளர் என பொதுப்பெயரை தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும். இவ்வாரு அவர் பேசினார்.

முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வந்த கிருஷ்ணசாமியை பைபாஸ்ரோடு, ஆர்டிஓ அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக அழைத்துச் செல்ல போலீஸார் அனுமதிக்காததால் ஆத்திரமடைந்த அக்கட்சியினர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதித்தது.

SCROLL FOR NEXT