கரோனா பரவல் காரணமாக கடந்த 9 மாதங்களாக மூடப்பட்டுள்ள பள்ளிகளை திறப்பது தொடர்பாக அரசின் அறிவுறுத்தல்படி சேலத்தில் பெற்றோர்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் பள்ளிகளில் நடந்தது.
சேலம் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என 600-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் மாணவர்களின் பெற்றோரிடம் கருத்துக்கேட்பு கூட்டங்கள் நடத்த மாவட்ட கல்வி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது. மாவட்டத்தில் பெரும்பாலான பள்ளிகளில், அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் தலைமையில் கருத்துக்கேட்புக் கூட்டம் நடந்தது.
கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை வழிமுறைகளை கடைப் பிடித்து கூட்டம் நடந்தது. முன்னதாக, கூட்டம் நடத்துவது தொடர்பான வழிமுறைகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷ் மூர்த்தி, காணொலி மூலம் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு விளக்கினார்.
கருத்துக் கேட்புக் கூட்டங்களை வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர் மற்றும் மேற்பார்வையாளர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். கூட்டத்தில் பங்கேற்ற பெற்றோர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.
பள்ளிகள் திறக்கப்பட்டால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பின்பற்றும் கரோனா தடுப்பு வழிகாட்டுதல் தொடர்பாக பெற்றோர் களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.