சேலம் மாவட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் உள்ளிட்ட 25 இடங்களில் நாளை (8-ம் தேதி) கரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறவுள்ளது.
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் 1 இடங்களில் கடந்த 2-ம் தேதி கரோனா தடுப்பூசி ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது. ஒத்திகை வெற்றிகரமாக நடைபெற்றுள்ள நிலையில், தற்போது, அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி ஒத்திகை நடத்த சுகாதாரத் துறை மூலம் நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி சேலம் மாவட்டத்தில் நாளை (8-ம் தேதி) கரோனா தடுப்பூசி ஒத்திகை மேற்கொள்ளப்படுகிறது.
இதுதொடர்பாக சுகாதாரத்துறை அலுவலர்கள் கூறியதாவது:
சேலம் மாவட்டத்தில் மருத்துவர் கள், செவிலியர்கள், மருத்துவ உதவியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட 18 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி போட பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் அரசு மருத்துவமனைகள் உள்ளிட்ட 25 இடங்களில் நாளை கரோனா தடுப்பூசி ஒத்திகை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஒத்திகையின்போது, தடுப்பூசி போட்டுக் கொள்ள வருபவர்கள் காத்திருக்கும் அறை, அவருக்கு உடல்நிலை பரிசோதனை, தடுப்பூசி போட்டுக் கொள்பவரின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் சரிபார்ப்பு, தடுப்பூசி செலுத்துதல், பின்னர் காத்திருப்பு அறையில் அரை மணி நேரம் காத்திருத்தல், அப்போது அவரது உடல்நிலை மாற்றங்கள் குறித்த கண்காணிப்பு, ஒரு நபருக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு ஆகும் நேரம் ஆகியவற்றை கணக்கிடல் போன்றவை ஒத்திகையாக நடத்தப்படும்.
சேலம் மாவட்டத்துக்கு முதல் கட்டமாக ஒதுக்கீடு செய்யப்படும் தடுப்பூசிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, 18 ஆயிரம் பேரில் முன்னுரிமை அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும். பின்னர் அடுத்தடுத்த கட்டங்களில் மற்றவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.