சேலம் மாநகராட்சி பகுதிகளில் செயல்படும் உணவகங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் பணிபுரியும் அனைத்துப் பணியாளர்களும் கரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பான விழிப்புணர்வு கூட்டம் மாநகராட்சி தொங்கும் பூங்கா பல்நோக்கு கலையரங்கில் நடந்தது. கூட்டத்துக்கு தலைமை வகித்து மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் பேசியதாவது:
சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள நட்சத்திர விடுதிகள் மற்றும் உணவகங்களில் கரோனா தடுப்புக்கான அரசின் வழிகாட்டுதல்களை முழுமையாக கடைபிடிக்க வேண்டும்.
அனைத்து பணியாளர்களும் கரோனா பரிசோதனை கட்டாயம் செய்து கொள்ள வேண்டும்.
இன்று (7-ம் தேதி) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை சூரமங்கலம் மண்டலத்தில் ஜாகிர் அம்மாபாளையம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, அஸ்தம்பட்டி மண்டலத்தில் குமாரசாமிபட்டி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், அம்மாப்பேட்டை மண்டலத்தில் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி, தேர்வீதி துப்புரவு ஆய்வாளர் அலுவலகம், கொண்டலாம்பட்டி மண்டலத்தில் சஞ்சீவராயன்பேட்டை மாநகராட்சி நடு நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் சிறப்பு முகாம்கள் நடக்கிறது.
இம்முகாம்களை உணவ கங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் பணிபுரியும் பணி யாளர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில், உதவி ஆணையர் சரவணன், மருத்துவ அலுவலர் ஜோசப், சுகாதார அலுவலர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், உணவகங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளின் உரிமை யாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.