அரியலூர்/ புதுக்கோட்டை/ பெரம்பலூர்: தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியர் மேம்பாட்டு சங்கத்தினர் தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி நேற்று அரியலூர், புதுக்கோட்டை, பெரம்பலூரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அரியலூர் அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் மகேஸ்வரி தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் செல்வி, செயலாளர் விஜயசரஸ்வதி உட்பட செவிலியர்கள் பலர் கலந்துகொண்டனர்.
இதேபோல, புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அரசு பொது அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, எம்ஆர்பி செவிலியர் மேம்பாட்டு சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் சி.நாச்சாரம்மாள் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் பொ.அனுசுயா, நிர்வாகி பிரித்தி, அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.ரங்கசாமி உள்ளிட்டோர் பேசினர்.
பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியர்கள் மேம்பாட்டுச் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆர்.சகுந்தலா தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் எஸ்.ஜெயசித்ரா முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் எம்.பி.ஆனந்த் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.