திருநெல்வேலி மாவட்டத்தில் வரும் 17-ம் தேதி நடைபெறும் தேசிய தீவிர போலியோ சொட்டு மருந்து முகாமில், 1.35 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளதாக ஆட்சியர் விஷ்ணு தெரித்தார்.
போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்துவது தொடர்பாக பல்வேறு துறை அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட ஆட்சியர் கூறியதாவது:
இந்தியாவில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்படுகிறது. இதனால் கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து போலியோ தாக்கம் இல்லாமல் உள்ளது. இந்நிலையில் நாடு முழுக்க வரும் 17-ம் தேதி ஒரே தவணையாக போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடத்தப்படவுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெறவுள்ள முகாம்களின் வாயிலாக 1.35 லட்சம் குழந்தைகள் பயனடைவர். இதற்காக கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் 1,642 இடங்களில் முகாம் நடைபெற உள்ளது. விடுபட்ட குழந்தைகளுக்கு அடுத்த 2 நாட்கள் பணியாளர்கள் வீடுவீடாகச் சென்று சொட்டு மருந்து வழங்குவார்கள் என்றார்.
மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.பெருமாள், சுகாதார பணிகள் துணை இயக்குநர் வரதராஜன், மாநகர் நல அலுவலர் சரோஜா, மற்றும் வட்டார மருத்துவ அலுவலர்கள், சுகாதார செவிலியர்கள் கலந்து கொண்டனர்.