விளை நிலங்களில் உயர் மின்கோபுரம் அமைக்கப்பட்டதற்கு உரிய நிதி வழங்க அடுத்த வாரம் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது, என தமிழக மின்சாரத்துறை அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார்.
திருச்செங்கோடு மற்றும் எலச்சிபாளையத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சிகளில் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி கலந்து கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மல்லசமுத்திரம், எலச்சிப்பாளையம் ஊராட்சி ஒன்றியங்கள், பரமத்தி ஆகிய இடங்களுக்கு புதிய கூட்டுக் குடிநீர் திட்டம் கொண்டு வரவேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கான ஆய்வுப் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. ஆய்வு முடிந்தவுடன் பூலாம்பட்டியில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்படும் திட்டத்திற்குண்டான நிதியை ஒதுக்கி முதல்வர் அடிக்கல் நாட்ட உள்ளார்.
தமிழகத்தில் விளை நிலங்களில் உயர் மின்கோபுரம் அமைக்கப்பட்டதற்கு சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு அரசாணைப்படி உரிய நிதி வழங்க அடுத்த வாரம் பேச்சுவார்த்தைக்கு அழைத்து உள்ளோம். அப்போது சுமுகத் தீர்வு காணப்படும். விவசாயிகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக, உயர் மின்கோபுரம் அமைக்கும் பணிகள், விவசாயிகளுடன் முத்தரப்பு ஒப்பந்தம் போடப்பட்ட பிறகே நடைபெற்று வருகின்றன, என்றார்.