கடந்த 8 ஆண்டுகளாக மகளிர் சுய உதவி குழுக்கள் முடக்கப்பட்டுள்ளன என திமுக எம்பி தயாநிதி மாறன் குற்றம்சாட்டியுள்ளார்.
சேலம் மத்திய மாவட்டத்துக்கு உட்பட்ட வடக்கு மற்றும் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதிகளில் ‘ஸ்டாலின் குரல்’ பிரச்சார கூட்டம் நேற்று நடந்தது. முன்னதாக சேலம் கிச்சிப்பாளையம், சன்னியாசிகுண்டு, லைன்மேடு, தாதகாப் பட்டி, அம்மாப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் நெசவாளர்கள், பட்டு உற்பத்தியாளர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர், அருந்ததியர் மற்றும் பொதுமக்களை சந்தித்து அவர்களின் பிரச்சினைகளை திமுக எம்பி தயாநிதி மாறன் கேட்டறிந்தார்.
தொடர்ந்து நடந்த கூட்டத்துக்கு, திமுக மத்திய மாவட்ட செயலாளர் எம்எல்ஏ ராஜேந்திரன் தலைமை வகித்தார். கூட்டத்தில் திமுக எம்பி தயாநிதி மாறன் பேசியதாவது:
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், பொங்கல் பரிசுத் தொகை ரூ.2,500 டாஸ்மாக் மூலமாக அரசுக்கு வந்து விடும் என்று கூறி மக்களை தரம் தாழ்த்தி வருகிறார். இவர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும். மகளிர் சுய உதவி குழுக்கள் முறையாக செயல்படவில்லை. கடந்த 8 ஆண்டுகளாக மகளிர் சுய உதவி குழுக்கள் முடக்கப்பட்டு உள்ளன.
நெசவாளர்கள் ஜிஎஸ்டி வரியால் பாதிக்கபட்டு வரு கின்றனர். திமுக ஆட்சி மலர்ந்ததும் இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.