தூத்துக்குடியில் சரக்கு ஆட்டோவில் மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட் டிருந்த கடல் அட்டைகள். 
Regional02

300 கிலோ கடல் அட்டைகள் தூத்துக்குடியில் பறிமுதல்

செய்திப்பிரிவு

தூத்துக்குடியில் சரக்கு ஆட்டோவில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 300 கிலோ கடல் அட்டைகளை போலீஸார் நேற்று பறிமுதல் செய்தனர்.

கடல் அட்டைகளை பிடிக்கவும், விற்பனை செய்யவும் இந்திய அரசுதடை விதித்துள்ளது. இருப்பினும் கடல் அட்டைகளுக்கு பல்வேறு வெளிநாடுகளில் நல்ல தேவை இருப்பதால், அவற்றை சட்டவிரோதமாக பிடித்து, பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு கடத்துவது அதிகரித்துள்ளது. இதற்கென்றே சில கும்பல்கள் தூத்துக்குடி உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் செயல்பட்டு வருகின்றன.

இவர்கள் மீனவர்களிடம் இருந்து கடல் அட்டைகளை வாங்கி,பதப்படுத்தி, வெளிநாடுகளுக்கு கடத்தும் தொழிலைச் செய்து வருகின்றனர். இவர்களை கண்காணித்து பிடிக்க கடலோர காவல்படையினர், கடலோர பாதுகாப்புகுழும போலீஸார், உள்ளூர் போலீஸார் மற்றும் வனத்துறையினர் தீவிர ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

லூர்தம்மாள்புரம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு தாளமுத்துநகர் போலீஸார் ரோந்து சுற்றி வந்தனர். அங்குள்ள ஒரு கிட்டங்கி முன்பு சந்தேகமான வகையில் நின்று கொண்டிருந்த சரக்கு ஆட்டோவை போலீஸார் சோதனை செய்தனர். அதில், 8 மூட்டைகளில் 300 கிலோ எடையுள்ள பதப்படுத்தாத கடல் அட்டைகள் இருந்தன. கடல் அட்டைகள் மற்றும் சரக்கு ஆட்டோவை பறிமுதல் செய்த போலீஸார் அதனை காவல் நிலையம் கொண்டு வந்தனர். இவற்றை கடத்தி வந்தது யார் என்பது குறித்து விசாரணை நடைபெறுகிறது.

SCROLL FOR NEXT