சங்கராபுரத்தை அடுத்த ஆலத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்துகள் வழங்கும் பகுதி தரை மட்டத்திலிருந்து அதிகமான உயரத்தில் உள்ளது.
சங்கராபுரம் வட்டம் ஆலத்தூரில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, சுற்றுப்புற கிராமங்களைச் சார்ந்த நோயாளிகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் தினமும் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர்.அவ்வாறு வந்து செல்லும் நோயாளிகளுக்கு மருந்து விநியோகிக்கப்படும் அறையில், ஜன்னல் வழியே மருந்து வழங்கப்படுகிறது.ஆனால் ஜன்னல் அதிகப்படியான உயரத்தில் உள்ளது. ஜன்னலின் முன்பு, சில செங்கற்களை அடுக்கி உயரத்தை ஏற்படுத்தியுள்ளனர். அதன்மீது ஏறி நின்றே நோயாளிகள் மருந்துகளை வாங்கிச் செல்கின்றனர். இதனால் வயதானவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் சிரமத்திற்குள்ளாகி கீழே விழும் நிலை ஏற்படுகிறது. எனவே மருந்துகள் வழங்குமிடத்தில் எவ்வித அச்சமுமின்றி பாதுகாப்பான முறையில் மருந்துகளை வாங்கிச் செல்ல அப்பகுதியில் ஒரு மேடை அமைக்க வேண்டும் என்பது நோயாளிகளின் கோரிக்கை.
இதுதொடர்பாக மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் சதீஷிடம் கேட்டபோது, "ஆரம்ப சுகாதாரத்தை நிலையத்தை பார்வையிட்டு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்று தெரிவித்தார்.