கடலூர் புனித அன்னாள் மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற விழாவில் விலையில்லா மிதிவண்டிகளை மாணவ, மாணவிகளுக்கு தொழில்துறை அமைச்சர் சம்பத் வழங்கினார். 
Regional02

கடலூர் மாவட்டத்தில் பிளஸ் 1 பயிலும் 21,880 மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கப்படும்

செய்திப்பிரிவு

கடலூர் புனித அன்னாள் மேல் நிலை பள்ளியில் நடைபெற்ற விழாவில், அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் மேல்நிலை பள்ளிகளில் 11-வது வகுப்பு பயிலும் மாணவ,மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் நேற்று வழங்கினார்.மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி தலைமை தாங்கினார்.

இவ்விழாவில் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்ததாவது:

பள்ளிக்கு சென்று வர மாணவ,மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் 2011-2012-ம் கல்வியாண்டில் தொடங்கப்பட்டது. அதன் அடிப்படையில் 2019-2020-ம் கல்வியாண்டு வரை கடலூர் மாவட்டத்தில் பயின்ற 92 ஆயிரத்து 346 மாணவர்கள், 1 லட்சத்து 12 ஆயிரத்து 282 மாணவிகள் உட்பட மொத்தம் 2 லட்சத்து 4 ஆயிரத்து 628 மாணவர்களுக்கு ரூ.71.93 கோடி மதிப்பிலான மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன.

2020-2021-ம் கல்வியாண்டில் ரூ.8.62 கோடி மதிப்பீட்டில் கடலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் மேல்நிலை பள்ளிகளில் பயிலும் 11-வது வகுப்பு பயிலும் 21 ஆயிரத்து 880 மாணவ,மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

முதன்மை கல்வி அலுவலர் ஜோஸ்நிர்மலா, மாவட்ட கல்வி அலுவலர் சுந்தரமூர்த்தி, புனித அன்னாள் மகளிர் மேல்நிலை பள்ளி தலைமையாசிரியை அருட்சகோதரி லிட்டில் பிளவர், முதன்மை கல்வி அலுவலரின் நேர் முக உதவியாளர் முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT