சேலம் அழகாபுரம் பகுதியில் கூடியிருந்த மக்கள் மத்தியில் பேசிய மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன். படம்:எஸ்.குரு பிரசாத் 
Regional02

விவசாயம் முதல் விண்வெளி வரை பெண்களுக்கு சமஊதியம் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் உறுதி

செய்திப்பிரிவு

விவசாயம் முதல் விண்வெளி வரை பெண்களுக்கு சம ஊதியம் அளிக்கப்படும் என ஏற்காட்டில் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சேலம் மாவட்டத்தில் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். சேலம் அழகாபுரம் சாரதா கல்லூரி சாலையில் நேற்று காரில் நின்றபடி மக்களிடையே பேசினார். தொடர்ந்து, ஏற்காடு சென்ற அவர் ஏற்காடு ஏரி அருகே சாரல் மழைக்கு இடையே மக்களிடம் பேசினார். பின்னர், அங்குள்ள ஓட்டலில் நடந்த கூட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களிடையே அவர் பேசியதாவது:

ஏற்காட்டில் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. மோசமான சாலைகளும் உள்ளன. மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்தால் 6 மாதத்தில் சாலைகளை சரி செய்வோம். இங்கு காஃபி போர்டு மற்றும் இங்கு விளையும் பழங்களுக்கு இங்கேயே ஜூஸ் ஆலை இருக்க வேண்டும். மலைவாழ் மக்களின் நிலை மேம்பட வேண்டும். வன விலங்குகளை பாதுகாக்க இங்கு காட்டெருமை சரணாலயம் அமைக்கப்படும்.

விவசாயி என்ற பட்டம் பெண் களுக்கும் வழங்கப்பட வேண்டும். பெண் தொழில் முனைவோருக்கு தனி சலுகைகள் அளிக்க வேண்டும். இல்லத்தரசிகளுக்கு ஊதியம் என்பதை கேலி செய்தவர்கள் இப்போது எவ்வளவு கொடுப்பீர்கள் என்று கேட்கிறார்கள். விவசாயம் முதல் விண்வெளி வரை பெண்களுக்கு சம ஊதியம் வழங்கப்படும். எங்களது அமைச்சரவையில் பெண்களுக்கு 50 சதவீதம் வழங்கப்படும். இதுவே எங்கள் நிலைப்பாடு.

ஐஏஎஸ் அதிகாரிகளை வைத்து டாஸ்மாக் கடைகளை பெரும் தொழிலாக நடத்த வேண்டுமா? எங்கள் அரசு அதை தனியாரிடம் விட்டு விட்டு, கல்வி, மருத்துவத்தை நாங்கள் ஏற்று நடத்துவோம். நான் ஹெலிகாப்டரில் வருவதாகக் கூறுகின்றனர். நான் என்னுடைய பணத்தில் மக்களை சந்திக்க போயிங் விமானத்தில் கூட வருவேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT