ஆத்தூர் அருகே டிராக்டர் கவிழ்ந்ததில், 15 பெண் தொழிலாளர் கள் பலத்த காயம் அடைந்தனர்.
ஆத்தூர் அடுத்த துலக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாய பெண் கூலித் தொழிலாளர்கள், அம்மம்பாளையத்தில் உள்ள தனியார் விதை நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் தினமும் டிராக்டரில் பணிக்கு செல்வது வழக்கம். நேற்று காலை டிராக்டரில் பெண் தொழிலாளர்கள் 20 பேர் வேலைக்கு சென்று கொண்டிருந்தனர்.
டிராக்டர் துலக்கனூர் பால்சொசைட்டி அருகே சென்றபோது, குறுக்கே வந்த இருசக்கர வாகத்தின் மீது மோதாமல் இருக்க டிராக்டரை ஓட்டுநர் சாலையின் பக்கவாட்டில் திருப்பியபோது டிராக்டர் கவிழ்ந்தது.
இதில், டிராக்டரில் பயணம் செய்த ராணி (40), பெரியம்மாள் (46), செல்வி (49), செல்லம்மாள் (65), காவேரி (60), சகுந்தலா (60), இளஞ்சியம் (40), தெய்வானை( 45) உள்ளிட்ட 15 பேர் காயம் அடைந்தனர். அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு, ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக ஆத்தூர் ரூரல் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.