கிருஷ்ணகிரி மாவட்டம் மாதேப்பட்டி பகுதியில் தெண்பெண்ணை ஆற்றில், நீரோட்டம் தடைபடும் வகையில் படர்ந்துள்ள ஆகாயத் தாமரைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஓசூர் அடுத்த கெலவரப்பள்ளி அணையில் இருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவைப் பொறுத்து, கிருஷ்ணகிரி அணைக்கு நீர் வரத்து குறைந்தும், அதிகரித்தும் வருகிறது. அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு கிருஷ்ணகிரி அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 48 கனஅடியாக இருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால், கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து நேற்று காலை விநாடிக்கு 110 கனஅடியாக அதிகரித்தது. அணையின் மொத்த உயரமான 52 அடியில் 50.65 அடிக்கு தண்ணீர் உள்ளது. அணையில் இருந்து 2-ம் போக சாகுபடிக்கு வலது மற்றும் இடதுபுறக் கால்வாய்கள் வழியாக விநாடிக்கு 173 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலவரப்பள்ளி அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் திறந்துவிடப்படும் தண்ணீர் அலியாளம், கொலுசுமடுவு பாறைகள், எண்ணேகொல்புதூர் தடுப்பணை உட்பட 11 தடுப்பணைகளைக் கடந்து கிருஷ்ணகிரி அணைக்கு வருகிறது. இந்நிலையில் மாதேப்பட்டி பகுதியில் தென்பெண்ணை ஆற்றில் அதிகளவில் ஆகாயத் தாமரைகள் படர்ந்துள்ளன. இதனால் தண்ணீர் சீராக செல்வது தடைபடுவதாகவும், நீர் மாசு ஏற்படுவதாகவும் அப்பகுதி விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். புதர் போல் படர்ந்து காட்சியளிக்கும் ஆகாயத் தாமரை செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.