மன்னார்குடி அருகே தற்போது செயல்பட்டுவரும் மாவட்டக் கல்வி அலுவலகத்தை காலி செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், புதிய இடத்தை மன்னார்குடி நகருக்குள் தேர்வு செய்து அளிக்க வேண்டும் என ஆட்சியருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஒரே கல்வி மாவட்டமாக செயல்பட்டுவந்த திருவாரூர் கல்வி மாவட்டம் கடந்த 2018-ம் ஆண்டு பிரிக்கப்பட்டு, மன்னார்குடி கல்வி மாவட்டம் புதிதாக உதயமானது. இதற்கான அலுவலகம் மன்னார் குடி அருகே மேலவாசல் குமரபுரத் தில் உள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், மாவட்ட ஆசிரியர் பயிற்சி பள்ளிக்கு தேசிய தரச்சான்றிதழ் பெறுவதற்கான முயற்சி தற்போது நடைபெற்று வருவதால், அந்தப் பள்ளி வளாகத்தில் வேறு எந்த அலுவலகத்துக்கும் இட மளிக்கக் கூடாது எனக் கூறி, உடனடியாக மாவட்டக் கல்வி அலுவலகத்தை காலிசெய்யும்படி மாவட்ட ஆசிரியர் பயிற்சி பள்ளி கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும், மன்னார்குடியில் இருந்து 5 கி.மீ தொலைவில் செயல்படும் இந்த அலுவலகத்துக்கு வந்துசெல்வதில் சிரமம் ஏற்படுவதாக ஆசிரியர் களும் தெரிவிக்கின்றனர். இதனால், மாவட்டக் கல்வி அலுவலகத் துக்கான புதிய இடத்தை மன் னார்குடி நகரத்துக்குள் தேர்வு செய்து அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: மன்னார்குடி மாவட்டக் கல்வி அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் மன்னார்குடி, திருத் துறைப்பூண்டி, நீடாமங்கலம், கோட்டூர், முத்துப்பேட்டை ஒன்றி யங்களைச் சேர்ந்த 671 பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் தினமும் ஏதேனும் ஒரு காரணத்துக்காக மாவட்டக் கல்வி அலுவலகத்துக்கு வந்துசெல்வதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது.
எனவே, மன்னார்குடி நகரத்துக்குள் ஏதேனும் ஒரு அரசு கட்டிடத்தை ஒதுக்கி அலுவலகம் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
இதுகுறித்து ஓய்வுபெற்ற ஆசிரியர் இளங்கோவன் கூறிய தாவது: மன்னார்குடி கோட்டாட்சியர் அலுவலகம் புதிதாக கட்டப்பட்டு வருவதால், பழைய அலுவலகம் இன்னும் ஓரிரு மாதங்களில் காலி செய்யப்பட்டுவிடும். அந்தக் கட்டிடத்தை மாவட்டக் கல்வி அலுவலகத்துக்கு ஒதுக்கித்தர வேண்டும். மாவட்டக் கல்வி அலுவலகம் செயல்படுவதற்கான கட்டிடத்துக்கு கல்வித் துறை எவ்விதமான வாடகையும் ஒதுக்குவதில்லை. சேவை அடிப்படையில் அரசு கட்டிடங்களில் ஏதேனும் ஒன்றை பயன் படுத்திக்கொள்ள வேண்டுமென்ற உத்தரவு உள்ளது. இதன் காரண மாக, புதிய மாவட்டக் கல்வி அலுவலகத்தை அனைவரும் வந்து செல்ல வாய்ப்புள்ள இடத்தில் அமைப்பதற்கு இயலாமல் போகிறது. எனவே, ஆட்சியர் உரிய இடத்தை தேர்வு செய்துகொடுத்து, மன்னார்குடி மாவட்டக் கல்வி அலுவலகம் சிறப்பாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.