Regional03

மேட்டூர் அணையில் இருந்து கால்வாய் பாசனத்துக்கு 16-ம் தேதி வரை நீர் திறப்பு

செய்திப்பிரிவு

சேலம் மாவட்டம், மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வரும் 16-ம் தேதி வரை நீர் திறப்பு நீட்டிக்கப்பட்டுள்ளது.

காவிரி நீர் பிடிப்பு பகுதியில் மழை குறைந்துள்ளதால், மேட்டூர் அணைக்கு நீர் வரத்து குறைந்து வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று முன் தினம் விநாடிக்கு 877 கன அடியாக இருந்த நீர் வரத்து, நேற்று காலை விநாடிக்கு 1,057 கன அடியாக அதிகரித்துள்ளது. காவிரி டெல்டா மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில், பாசனத்துக்கான நீர் திறப்பு விநாடிக்கு 2 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. அதேநேரம், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு நீர் திறப்பு வரும் 16-ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

நடப்பு ஆண்டில் கால்வாய் பாசனத்துக்கு நீர் திறப்பு 16 நாட்கள் காலதாமதாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் 17-ம் தேதி கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்டது. நேற்று முன் தினத்துடன் கால்வாய் பாசனத்துக்கான நீர் திறப்பு 137 நாட்கள் நிறைவடைந்தது. ஆனால், காலதாமதமாக நீர் திறக்கப்பட்ட நாட்களை ஈடு செய்யும் விதமாக, மேலும் 16 நாட்கள் பாசனத்துக்கான நீர் திறப்பை நீடித்து கொடுக்க வேண்டும் என்று கால்வாய் பாசன பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனை ஏற்று தமிழக அரசு கால்வாய் பாசனத்துக்கான நீர் திறப்பை வரும் 16 நாட்களுக்கு நீடித்து உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 400 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவைக் காட்டிலும், திறப்பு அதிகமாக இருப்பதால் அணையின் நீர் மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்று முன் தினம் மேட்டூர் அணையின் நீர் மட்டம் 105.42 அடியாக இருந்தது. நேற்று காலை 105.28 அடியாக சரிந்தது. அணையில் நீர் இருப்பு 71.85 டிஎம்சி-யாக உள்ளது.

நீர்வரத்தில் மாற்றம் இல்லை

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்னதாக, சுற்று வட்டார பகுதி மழை மற்றும் காவிரி ஆறு தமிழகத்தை நோக்கி வரும் வழியில் உள்ள வனப்பகுதிகளில் பெய்த மழை ஆகியவற்றால் அவ்வப்போது நீர்வரத்தில் ஏற்ற, இறக்கங்கள் நிலவியது. மழை குறையத் தொடங்கியதால் நீர்வரத்தும் படிப்படியாகக் குறையத் தொடங்கியது. கடந்த ஒரு வார காலமாக விநாடிக்கு 2000 கன அடி என்ற அளவில் தொடர்ந்து தண்ணீர் ஓடிக் கொண்டிருக்கிறது. நேற்றும் காலை அளவீட்டின்படி விநாடிக்கு 2000 கன என்ற அளவில் நீர்வரத்து பதிவானது.

SCROLL FOR NEXT