Regional01

சேலம் அருகே உண்டியலை உடைத்து பணம், நகை கொள்ளை

செய்திப்பிரிவு

சேலம் அருகே மேச்சேரி கூணான்டியூரில் உள்ள அய்யனாரப்பன் கோயில் உண்டியலை மர்ம நபர்கள் உடைத்து, பணம், நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.சேலம் மாவட்டம், மேச்சேரி அருகே கூணான்டியூரில் அப்பகுதி மக்களின் குல தெய்வமான அய்யனாரப்பன் கோயில் உள்ளது. விசேஷ நாட்களில் அப்பகுதி மக்கள், ஆடு, கோழி பலியிட்டு, வேண்டுதலை நிறைவேற்றி, உண்டியலில் பணம், நகைகளை காணிக்கையாக செலுத்துவது வழக்கம். நேற்று அதிகாலை புத்தாண்டை முன்னிட்டு அய்யனாரப்பன் கோயிலுக்கு சுவாமி கும்பிட மக்கள் திரளாக வந்தனர். அப்போது, கோயில் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு, மேச்சேரி போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

மேச்சேரி போலீஸார் கோயிலுக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். நேற்று முன் தினம் புத்தாண்டு கொண்டாட்டத்தில் மக்கள் ஈடுபட்டிருந்த நேரத்தில், கோயில் பூட்டை உடைத்து, உண்டியலில் இருந்து நகை, பணத்தை கும்பல் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்துள்ளது. இக்கோயில் உண்டியல் திறக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் கடந்து விட்டது. கோயில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கும்பலை கண்டு பிடிக்கும் முயற்சியில் மேச்சேரி போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT