புத்தாண்டு விடுமுறையையொட்டி நேற்று கிருஷ்ணகிரி அவதானப்பட்டி ஏரியில் படகு சவாரி சென்ற சுற்றுலா பயணிகள். 
Regional02

பல மாதங்களுக்குப் பின்னர் திறக்கப்பட்ட அவதானப்பட்டி ஏரி படகு இல்லத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்

செய்திப்பிரிவு

புத்தாண்டு விடுமுறையையொட்டி கிருஷ்ணகிரி அணை பூங்கா மற்றும் அவதானப்பட்டி ஏரி படகு இல்லம், சிறுவர் பூங்காவில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

புத்தாண்டு பிறப்பையொட்டி நேற்று கிருஷ்ணகிரி அணை பூங்கா, அவதானப்பட்டி சிறுவர் பூங்கா, படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. கரோனா ஊரடங்கால், அவதானப்பட்டி சிறுவர் பூங்கா மற்றும் கிருஷ்ணகிரி அணைக்குள் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால், கிருஷ்ணகிரி அணை மற்றும் அவதானப்பட்டி படகு இல்லம் திறக்கப்பட்டது. முன்னதாக தூய்மைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

இந்நிலையில் புத்தாண்டு விடுமுறையையொட்டி நேற்று கிருஷ்ணகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்தும், வேலூர், திருவண்ணாமலை, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் கிருஷ்ணகிரி அணைப் பூங்கா மற்றும் அவதானப்பட்டி சிறுவர் பூங்கா, படகு இல்லம் ஆகிய இடங்களுக்கு வந்திருந்தனர். பூங்காவுக்கு வந்த சுற்றுலா பயணிகள் தங்கள் குழந்தைகளை பூங்காவில் உள்ள சறுக்கு பலகை, ஊஞ்சல் உள்ளிட்டவற்றில் விளையாட அனுமதித்து மகிழ்ந்தனர். அணை பகுதியில் உள்ள மீன் கடைகளிலும் கூட்டம் அதிக அளவில் இருந்தது. படகில் பாதுகாப்பு உடைகளை அணிந்து சுற்றுலா பயணிகள் சவாரி மேற்கொண்டனர். பல மாதங்களுக்கு பிறகு நேற்று பூங்காக்கள், படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது.

SCROLL FOR NEXT