சென்னையில் இருந்து புதுக் கோட்டை வழியாக ராமேசுவரம் செல்லும் ரயிலை புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் ரயில் நிலையத்தில் வழக்கம்போல நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னையில் இருந்து ராமேசுவரம் செல்லும் பயணிகள் ரயில் எக்ஸ்பிரஸ் ரயிலாக மாற்றம் செய்யப்பட்டதோடு, இந்த வழித்தடத்தில் நின்று செல்லும் ரயில் நிலையங்களின் பட்டியலையும் ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
அதில், புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் ரயில் நிலை யத்தில் நிறுத்தப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது அப்பகுதி யினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
எக்ஸ்பிரஸ் ரயிலாக ஜன.4-ம் தேதி முதல் இயக்கப்பட உள் ளது. அந்த நாளில் இருந்து வழக்கம் போல கீரனூரில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கீரனூர் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து கீரனூர் சமூக ஆர்வலர் நாதன் கூறியதாவது: கீரனூரானது பேரூராட்சி பகுதியாக இருப்பதோடு இங்கு, வட்டாட்சியர் அலுவலகம், அரசு மருத்துவமனை, நீதிமன்றம் போன்ற பல்வேறு அலுவலகங்களும் உள்ளன.
இங்கிருந்து திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள் சென்னை, ராமேசுவரம் ரயிலை அதிகம் பயன் படுத்தி வந்தனர். இந்த ரயில் ஜன.4-ம் தேதியில் இருந்து கீரனூரில் நிறுத்தப்படாது என அறிவித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வழக்கம்போல கீரனூரில் இந்த ரயில் நின்று, செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரயில்வே நிர்வாகம், மக்களவை உறுப்பினருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நடவடிக்கை இல்லாவிட்டால் ஜன.4-ம் தேதி ரயில் மறியலில் ஈடுபட உள்ளோம் என்றார்.