இன்றைய காலகட்டத்தில் சர்வதேச போட்டிகளில் இந்திய குத்துச்சண்டை வீரர்கள் பல பதக்கங்களை வென்று வருகிறார்கள். இதற்கு பிள்ளையார் சுழி போட்டவர் என்று டிங்கோ சிங்கை சொல்லலாம். 1998-ம் ஆண்டில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் இவர் வென்ற தங்கப் பதக்கம்தான் இந்தியாவின் பல குத்துச்சண்டை வீரர்களுக்கு நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. இந்த நம்பிக்கையைக் கொடுத்த டிங்கோ சிங்கின் பிறந்தநாள் இன்று (ஜனவரி 1).
குத்துச்சண்டை களத்தைப் போலவே, தனது வாழ்க்கையிலும் பல சவால்களைச் சந்தித்தவர் டிங்கோ சிங். மணிப்பூரின் இம்பால் மாவட்டத்தில் உள்ள ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர் டிங்கோ சிங். வறுமை காரணமாக டிங்கோ சிங்கின் பெற்றோரால், அவரை வளர்க்க முடியவில்லை. இதனால் சிறு வயதிலேயே அவரை ஒரு அனாதை இல்லத்தில் சேர்த்துள்ளனர். போஷாக்கான ஆகாரங்கள் ஏதும் இல்லாமலேயே அங்கு வளர்ந்தார் டிங்கோ சிங். அனாதை ஆஸ்ரமத்தில் வளர்ந்த காலத்தில், அங்குள்ள மாணவர்கள் மத்தியில் தங்களில் யார் பெரியவர் என்ற போட்டி நிலவியது. இந்தக் கட்டத்தில் தன்னை நிரூபிக்க குத்துச் சண்டை பயிற்சியில் ஈடுபட்டார் டிங்கோ சிங். இதுதான் பின்னாளில் அவர் ஒரு பிரபல குத்துச்சண்டை வீரராக விதையாக இருந்தது. அங்கிருந்து தேசிய விளையாட்டு ஆணையத்தின் பயிற்சி மையத்தில் சேர்ந்த டிங்கோ சிங், பல்வேறு குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்றார். 1998-ம் ஆண்டில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா சார்பாக பங்கேற்க இவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை. பின்னர் கடுமையாக போராடி அணியில் இடம்பெற்ற அவர், இதில் தங்கப் பதக்கம் வென்றார். பின்னாளில் இந்திய கடற்படையிலும் சேர்ந்து தேச சேவையில் ஈடுபட்டார்.
குத்துச்சண்டை களங்களில் இந்தியாவுக்காக போராடிவந்த இவர், இப்போது புற்று நோயுடன் போராடி வருகிறார். குத்துச்சண்டை களத்தைப் போலவே இந்த களத்திலும் அவர் வாகை சூடட்டும்.