Regional02

கடந்த ஆண்டில் 70 வழக்கில்ரூ.4 கோடி மதிப்பு பொருட்கள் மீட்பு சேலம் மாவட்ட எஸ்பி தகவல்

செய்திப்பிரிவு

சேலம் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் 70 திருட்டு வழக்கில் ரூ.4 கோடி மதிப்புள்ள பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது என சேலம் எஸ்பி தீபாகாணிகர்தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சேலம் மாவட்டத்தில் கடந்த2019-ம் ஆண்டு நடந்த விபத்தில் 316 பேர் உயிரிழந்தனர். 2020-ம் ஆண்டு நடந்த விபத்துகளில் உயிரிழப்பு 286 ஆக குறைந்துள்ளது. இதர விபத்து வழக்குகள் கடந்த 2019-ம் ஆண்டு 1,637 ஆக இருந்தது, 2020-ம் ஆண்டு 1,206 ஆக குறைந்துள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டை விட 2020-ம் ஆண்டு வழிப்பறி குற்றங்களை ஒப்பிடும்போது 29 வழக்கில் இருந்து 12 வழக்காக குறைந்துள்ளது. அதேபோல, திருட்டு வழக்குகள் 74-ல் இருந்து 70 ஆக குறைந்துள்ளது. ஒட்டு மொத்த குற்றங்கள் பதிவு செய்ததில் 85 சதவீதம் வழக்குகளில், 95 சதவீதம் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

70 திருட்டு வழக்குகளில் ரூ.4.கோடியே 9 லட்சத்து 83 ஆயிரத்து 360 மதிப்பிலான சொத்துக்கள் மீட்கப்பட்டு உரிமைதாரர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் ரவுடிகள் மற்றம் மதுவிலக்கு குற்றவாளிகள் என 23 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மதுவிலக்கு சம்பந்தமாக 2020-ம் ஆண்டு 6,912 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், கள்ளச்சாராய விற்பனை அறவே ஒழிக்கப்பட்டுள்ளது.

சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 3,474 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. புத்தாண்டு முதல் காவல் நிலையத்தில் புகார் தரும் மனுதாரர்களுக்கு உடனடி நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காண அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT