சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ரூ.6.35 கோடி மதிப்பில் புனரமைப்பு பணி தொடங்கப்பட்டுள்ளது.
சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் கடந்த 1862-ம் ஆண்டு கட்டப்பட்டது. 158 ஆண்டுகள் பழமையான இந்த நீதிமன்ற வளாகத்தில் தொழிலாளர் நீதிமன்றம், அத்தியாவசியப் பண்டங்கள் சிறப்பு நீதிமன்றம், நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு நீதிமன்றம், நுகர்வோர் நீதிமன்றங்கள், மாவட்ட முதன்மை நீதிமன்றங்கள் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன.
ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடத்தில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள சென்னை உயர் நீதிமன்றம் நடவடிக்கை எடுத்து ரூ.6.36 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதையடுத்து, புனரமைப்பு பணி தொடக்க விழா நேற்று நடந்தது.
மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுரு புனரமைப்பு பணிகளை தொடங்கி வைத்தார். விழாவில், நீதிபதிகள் இளங்கோ, சுகந்தி, மூத்த வழக்கறிஞர் ராஜசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.