சொத்து வரி பெயர் மாற்றம் செய்ய ரூ.6 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில், சேலம் மாநகராட்சி வரி வசூலிப்பாளருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி சேலம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலம் கிச்சிப்பாளையம் களரம்பட்டி மெயின்ரோடு பகுதியில் கன்னியாகுமரியைச் சேர்ந்த பிரதீபன் என்பவர் டயர் ரீட்-டிரேடிங் நிறுவனம் நடத்தி வந்தார். இவர் வாடகைக்கு இருந்த கட்டிடத்தை கடந்த 2010-ம் ஆண்டு ஜூன் மாதம் விலைக்கு வாங்கினார். இதையடுத்து அந்த கடைக்கு தன் பெயரில் சொத்து வரி ரசீது வழங்கக் கோரி சேலம் மாநகராட்சி அம்மாப்பேட்டை மண்டல அலுவலகத்தில் பணிபுரியும் வரி வசூலிப்பாளர் பாலகிருஷ்ணன் (53) என்பவரிடம் கேட்டிருந்தார்.
சொத்து வரி பெயர் மாற்றி வழங்க ரூ.7 ஆயிரம் லஞ்சம் வேண்டும் என பாலகிருஷ்ணன் கேட்டுள்ளார். அதற்கு பிரதீபன் மறுக்கவே இறுதியாக ரூ.6 ஆயிரம் கேட்டுள்ளார். இதுதொடர்பாக சேலம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரிடம் பிரதீபன் புகார் செய்தார். போலீஸாரின் அறிவுரைப்படி பிரதீபன் ரூ.6 ஆயிரம் பணத்தை பாலகிருஷ்ணனிடம் கொடுத்தபோது, லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் பாலகிருஷ்ணனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை சேலம் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
விசாரணை முடிந்த நிலையில், தனி நீதிபதி சுகந்தி, வரி வசூலிப்பாளர் பாலகிருஷ்ணனுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.