Regional02

சம்பளம் கோரி மாநகராட்சி குடிநீர் திறப்பாளர்கள் தர்ணா போராட்டம்

செய்திப்பிரிவு

நிலுவை சம்பளத் தொகையை வழங்க வலியுறுத்தி, மாநகராட்சி குடிநீர் திறப்பாளர்கள் மண்டல அலுவலகம் முன் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகள் தலா 15 வார்டுகள் வீதம் பிரிக்கப்பட்டு, நான்கு மண்டலங்களாக நிர்வாகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் மாநகராட்சி தற்காலிக ஊழியர்களாக 105 பேர் குடிநீர் திறப்பாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்கு மாதம் ரூ.4705 ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த ஏழு மாதங்களாக அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை என தெரிகிறது.

நிலுவை சம்பளத் தொகையை வழங்க வலியுறுத்தி, நல்லூரில் உள்ள மாநகராட்சி 3-வது மண்டலம் அலுவலக நுழைவுவாயில் முன்பு, குடிநீர் திறப்பாளர்கள் 30 பேர் நேற்று காலை முதல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, இரண்டு தினங்களில் சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப் பட்டது.

இதை ஏற்காத குடிநீர் திறப்பாளரகள், இன்று (டிச.30) 4 மண்டலங்களிலுள்ள அனைத்து குடிநீர் திறப்பாளர் களையும் திரட்டி போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக கூறி கலைந்து சென்றனர்.

SCROLL FOR NEXT