கெங்கவல்லி அடுத்த சொக்கனூர் அக்ரஹாரம் கிராமத்தில் பொன்னி ஓடையின் குறுக்கே ரூ.26.30 கோடி மதிப்பீட்டில் புதிய ஏரி அமைக்க பூமி பூஜை நடந்தது.
நிகழ்ச்சிக்கு, தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கித் தலைவர் இளங்கோவன், எம்எல்ஏ-க்கள் கெங்கவல்லி மருதமுத்து, ஆத்தூர் சின்னதம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆட்சியர் ராமன் தலைமை வகித்து, பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி பேசியதாவது:
புதிதாக அமையவுள்ள ஏரியின் நீர்பிடிப்பு பகுதி சுமார் 4.29 சதுர மைல் ஆகும். இதில், 2 மதகுகள் இடம்பெறவுள்ளன. வலது புற கால்வாய் 1,595 மீட்டரும், இடது புற கால்வாய் 1,750 மீட்டர் கொண்டது. இதன் மூலம் 446 ஏக்கர் நிலங்கள் நேரடியாக பாசன வசதி பெறும். இத்திட்டத்தின் மூலம் நிலத்தடி நீர் மட்டம் உயரும்.
ஏரி அமைக்க 85 பட்டாதாரர்கள், தங்களது நிலங்களை வழங்கிட முன்வந்துள்ளனர். மேலும், 6 பட்டாதாரர்கள் தங்களது முழு நிலத்தையும் கொடுத்துள்ளனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
மாநில கூட்டுறவு வங்கித் தலைவர் இளங்கோவன் பேசும்போது, “இங்குள்ள ஓடையை மக்கள் கடந்து செல்ல வசதியாக அதன் குறுக்கே தலா ரூ.3 லட்சம் மதிப்பில் 2 உயர் மட்டப் பாலங்கள் கட்டிதர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேட்டூர் உபரிநீரைக் கொண்டு கெங்கவல்லி, ஏற்காடு மற்றும் ஆத்தூர் சட்டப்பேரவை தொகுதிகளில் உள்ள அனைத்து ஏரிகளுக்கும் நீரினை நிரப்பிட ஒரு குழு அமைத்து விரிவாக திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது” என்றார்.
நிகழ்ச்சியில், ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் துரை, பொதுப்பணித் துறை நீர்வள ஆதாரத் துறை செயற்பொறியாளர் கவுதமன், உதவி பொறியாளர் சாந்தகுமார், கெங்கவல்லி வட்டாட்சியர் சிவக்கொழுந்து, தலைவாசல் ஊராட்சி ஒன்றியத் தலைவர் ராமசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.