பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் பெரம்பலூர் சர்க்கரை ஆலையின் 43-வது ஆண்டு பேரவைக் கூட்டம், சர்க்கரைத் துறை ஆணையர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஆனந்த்குமார் தலைமையில், மாவட்ட ஆட்சியர் வெங்கட பிரியா முன்னிலையில் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் டெல்லியில் புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்தில் உயிர் நீத்த விவசாயிகளுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் அனைத்து விவசாய சங்கங்கள் சார்பில் நிர்வாகிகள் அளித்த கோரிக்கை மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்த தாவது:
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். தமிழக அரசு முத்தரப்பு பேச்சுவார்த்தையை நடத்தி 2020-21-ம் ஆண்டுக்கு கரும்பு விவசாயிகளுக்கு தற்போது உள்ள விலையை உயர்த்தி கரும்புக்கு டன்னுக்கு ரூ.4,500 ஆக விலை அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தன.
இக்கூட்டத்தில் விவசாய சங்க பிரதிநிதிகள் ஞானமூர்த்தி, ஆர்.ராஜாசிதம்பரம், என்.செல்லதுரை, ஆ.கே.ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.