தெலுங்கு கங்கை திட்டப்படி, ஆந்திர அரசு சென்னை குடிநீர்தேவைக்காக கண்டலேறு அணையில் இருந்து, தமிழகத்துக்கு ஆண்டுதோறும் இருகட்டங்களாக 12 டி.எம்.சி கிருஷ்ணா நீரை வழங்க வேண்டும். ஆனால், கண்டலேறு அணையின் நீர் இருப்பு குறைவால் நடப்பு ஆண்டுக்கான முதல்கட்ட நீரை ஆந்திர அரசு திறக்கவில்லை.
இந்நிலையில் பருவ மழையினால் கண்டலேறு அணை நிரம்பியது. ஆகவே, தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று சென்னை குடிநீருக்காக, கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நீரை ஆந்திர அரசு கடந்த செப்.18 முதல் திறந்து வருகிறது. அவ்வாறு திறக்கப்படும் கிருஷ்ணா நீர், கடந்த செப். 21-ம் தேதி காலை 6.10 மணி முதல் பூண்டி ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது.
தொடக்கத்தில் விநாடிக்கு 1,500 கன அடி என திறக்கப்பட்ட கிருஷ்ணா நீர், கடந்த செப். 20 முதல் விநாடிக்கு 2 ஆயிரம் கன அடியானது. நேற்றைய நிலவரப்படி கண்டலேறு அணையில் இருந்து விநாடிக்கு 1,200 கன அடி திறக்கப்படுகிறது.
அப்போது, விநாடிக்கு 100 கன அடி என வந்து கொண்டிருந்த கிருஷ்ணா நீரின் அளவு படிப்படியாக அதிகரித்து, நேற்றைய நிலவரப்படி விநாடிக்கு 631 கன அடி அளவு வந்து கொண்டிருக்கிறது.
கண்டலேறு அணையில் இருந்து சென்னை குடிநீருக்காக திறக்கப்படும் கிருஷ்ணா நீர், 98 நாட்களில் 5.025 டிஎம்சி அளவு, பூண்டி ஏரிக்கு வந்தடைந்துள்ளது.
மேலும், கிருஷ்ணா நீர் மட்டுமல்லாமல், மழை நீரும் பூண்டி ஏரிக்கு கணிசமாக வந்து கொண்டிருக்கிறது. ஆகவே 3,231 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியில் நேற்றைய நிலவரப்படி 3, 124 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. அதேபோல் 35 அடிஉயரம் கொண்ட பூண்டி ஏரியின் நீர்மட்டம் 34.93 அடியாக உயர்ந்துள்ளது.
எனவே, பூண்டி ஏரியில் இருந்து விநாடிக்கு 625 கன அடி நீர் சென்னை குடிநீர் தேவைக்காக கால்வாய்கள் மூலம் புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு அனுப்பப்படுகிறது; விநாடிக்கு 244 கன அடி உபரிநீர் கொசஸ்தலை ஆற்றில் திறந்துவிடப்படுகிறது என, பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.