சேலம் சோனா இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கல்லூரி மேலாண்மை அறங்காவலர் தியாகு வள்ளியப்பா செய்தியாளர் களிடம் கூறியதாவது:
சேலம் சோனா கல்வி குழுமம், தமிழ்நாடு எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக் கழகத்துடன் இணைந்து இயற்கை மருத்துவம் மற்றும் யோகா அறிவியல் இளங்கலை 5 ஆண்டுகள் 6 மாத படிப்புக்கு 100 இடங்களுக்கு தமிழக அரசின் அங்கீகாரம் பெற்றுள்ளது. இதில், 65 இடங்கள் அரசு ஒதுக்கீட்டிலும், 35 இடங்கள் மேலாண்மை ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கையை தொடங்கியுள்ளது.
இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மருத்துவக் கல்லூரியில் 100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை, டிஜிட்டல் நூலகம், அனுபவம் வாய்ந்த மருத்துவர்களை கொண்டு முதல் ஆண்டில் இருந்தே ஆராய்ச்சி முறையில் பயிற்சி அளிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கல்லூரி முதல்வர் எஸ்.மதன்குமார் கூறும்போது, “சோனா மருத்துவக் கல்லூரியின் மேற்பார்வையில் ஆயுஷ் சிகிச்சையகம் (இயற்கை மருத்துவம் மற்றும் யோகா) செயல்படுகின்றது. இயற்கை மருத்துவம், இயற்கை உணவுக்கு முதன்மை முக்கியத்துவம் கொடுக்கிறது. மசாஜ், மண் சிகிச்சை, நீர் சிகிச்சை, நறுமண சிகிச்சை, குத்தூசி மருத்துவம், அக்குபிரஷர், பிசியோதெரபி, போன்ற இயற்கை மருத்துவச் சிகிச்சை இங்கு வழங்கப்படும்” என்றார்.பேட்டியின்போது, சோனா மருத்துவக் கல்லூரி மருத்து வர்கள், சோனா தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் எஸ்.ஆர்.ஆர்.செந்தில்குமார், சோனா கலை அறிவியல் கல்லூரி முதல்வர் ஜி.எம்.காதர்நவாஷ் ஆகியோர் உடனிருந்தனர்.