ஈரோட்டில் சட்டப்பேரவைத் தேர் தலுக்காக கொண்டுவரப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்க்கும் பணியை ஆட்சியர் சி.கதிரவன் தொடங்கி வைத்தார்.
சட்டப்பேரவைத் தேர்தலுக்காக பல்வேறு இடங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், ஈரோடு ரயில்வே காலனி மாநகராட்சி அரசுப் பள்ளியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலை யில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரி பார்க்கும் பணியை மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான சி.கதிரவன் தொடங்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து செய்தி யாளர்களிடம் அவர் கூறியதாவது:
சட்டப்பேரவைத் தேர்தலுக்காக கொண்டு வரப்பட்ட 4,779 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 3,646 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 3,937 வி.வி.பேட் இயந்திரங்கள் ஆகியவை இப்பள்ளியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. பெல் நிறுவனத்திலிருந்து வரப் பெற்ற 6 பொறியாளர்கள் மூலம், முதல் நிலை சரிபார்க்கும் பணிகள் தொடங்கப்பட்டது.
ஒரு நபர் ஒரு நாளைக்கு 35 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 35 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் சரிபார்க்க முடியும் என்பதால், ஒரு நாளைக்கு 400 இயந்திரங்களை சரிபார்க்க வாய்ப்பு உள்ளது. இப்பணிகளை தேர்தல் ஆணையம் வெப் கேமரா மூலம் கண்காணிக்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்களில் மாதிரி முடிந்த பின்னர் பாதுகாப்பு இருப்பு அறையில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்படும், என்றார்.
இந்நிகழ்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் ச.கவிதா, மாநகராட்சி ஆணையர் இளங்கோவன், வருவாய் கோட்டாட்சியர் சைபுதீன், தேர்தல் வட்டாட்சியர் சிவகாமி உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.