Regional02

தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை கடத்திய பிரபல அரசியல் கட்சி பிரமுகர் கைது

செய்திப்பிரிவு

தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருட்களை விற்பனைக்காக கடத்தி சென்ற பிரபல கட்சியின் மாவட்ட செயலாளரை போலீஸார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறும்போது, "திருப்பூர் - காங்கயம் சாலை கே.எம்.பி. காலனி பகுதியைச் சேர்ந்தவர் ஹைதர் அலி (52). இவர், பிரபல கட்சி ஒன்றில் மாவட்ட செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். மேலும், இரண்டாம் தர பின்னலாடை வியாபாரமும் செய்து வருகிறார். இந்நிலையில், திருப்பூர் - அவிநாசி சாலை ஆசர் மில் பேருந்து நிறுத்தம் எதிரே உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் பின்புறம் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில், நேற்று முன்தினம் இரவு அனுப்பர்பாளையம் போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, ஒரு மூட்டையுடன் இருசக்கர வாகனத்தில் வந்த ஹைதர் அலியை பிடித்து விசாரித்ததில், முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தார். இருசக்கர வாகனத்தில் கொண்டு வந்த மூட்டையை பிரித்து பார்த்ததில் 15.5 கிலோ புகையிலைப் பொருட்கள் இருந்ததும், விற்பனைக்காக கொண்டு வந்ததும் தெரியவந்தது. அவரை கைது செய்த போலீஸார், புகையிலைப் பொருட்கள் மற்றும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்" என்றனர்.

SCROLL FOR NEXT