ராசிபுரத்தில் விரைவில் புறவழிச்சாலை பணிகள் தொடங்கப்படவுள்ளது, என சமூகநலத்துறை அமைச்சர் வெ.சரோஜா பேசினார்.
ராசிபுரம் அருகே காக்காவேரி மற்றும் வேலம்பாளையம் ஆகிய இடங்களில் அம்மா மினி கிளினிக்குகள் திறப்பு விழா நடைபெற்றது. மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர் பி.ஆர்.சுந்தரம் தலைமை வகித்தார். சமூக நலன் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அமைச்சர் வெ.சரோஜா அம்மா மினி கிளினிக்குகளை திறந்து வைத்துப் பேசியதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் தற்போது 63 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 9 அரசு மருத்துவமனைகள் அமைந்துள்ளன.
இந்த இடங்கள் தவிர மக்கள் அதிகம் உள்ள இடங்களில் அம்மா மின கிளினிக் அமைய உள்ளது.
ராசிபுரத்தில் போக்குவரத்து பயன்பாட்டிற்காக புறவழிச்சாலை பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளது. குடிசை மாற்று வாரியம் மூலமாக கட்டப்பட்டு வரும் வீடுகள் 1,500 குடும்பங்களுக்கு வழங்கப்படவுள்ளன.
ராசிபுரம் நெடுங்குளம் திட்டம் நிறைவேற்றப்பட்டால் ராசிபுரம் தொகுதி முழுவதும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும், என்றார்.
விழாவில், மாவட்ட சுகாதாரப் பணிகள் உதவி இயக்குநர் நக்கீரன், வட்டார மருத்து அலுவலர் செல்வி, வட்டாட்சியர் பாஸ்கர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அருணன், கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.