சனீஸ்வரர் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு இடம் பெயரும் நிகழ்வு நேற்று நடந்தது. இதையொட்டி கிருஷ்ணகிரி அடுத்த தேவசமுத்திரத்தில் உள்ள காசி சனீஸ்வரர் கோயிலில் காலை 6 மணி முதல் கால பைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. மேலும், சனீஸ்வரருக்கு அபி ஷேகம், சிறப்பு அலங்காரம், பரிகார பூஜைகள் ஆகியவை நடத்தப்பட்டன. தொடர்ந்து நவக் கிரக சாந்தி நிகழ்ச்சியும் நடந்தது.
இந்த நிகழ்வுகளை ஒட்டி பக்தர்கள் கருப்பு எள்ளை உள்ளங்கையில் வைத்து இறுக்கிப் பிடித்தவாறு தங்கள் தலையைச் சுற்றிய பின்னர் ஹோமத்தில் இட்டு பரிகார பூஜைகள் செய்தனர். ஒவ்வொரு ராசிக்கும் உரிய பரிகார பூஜைகளும் நடந்தது.
தருமபுரி அடுத்த அதியமான்கோட்டை காலபைரவர் கோயிலில் சனிப்பெயர்ச்சியை ஒட்டி சில ராசிக்காரர்கள் தங்களுக் கான பரிகாரமாக குடை, காலணி ஆகியவற்றை காணிக்கையாக கொடுத்து வழிபட்ட விநோத வழிபாடும் நடந்தது.