உடல்நலக்குறைவால் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் கடம்பூர் ஜனார்த்தனனின் உடல் நேற்று கடம்பூரில் அடக்கம் செய்யப்பட்டது.
கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட கடம் பூரைச் சேர்ந்தவர் எம்.ஆர். ஜனார்த்தனன்(91). அதிமுக வின் மூத்த தலைவரான இவர், தூத்துக்குடி மாவட்ட அதிமுக செயலாளராகவும், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற பொதுச்செயலாளராகவும் பணியாற்றி உள்ளார்.
1984, 89, 91-ம் ஆண்டுகளில் தொடர்ச்சியாக 3 முறை திருநெல்வேலி மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பிரதமர் வாஜ்பாய் அமைச்சரவையில் மத்திய பணியாளர் மற்றும் சீர்திருத்தத் துறை அமைச்சராகவும், கூடுதலாக நிதித்துறை இணை அமைச்சராகவும் பணியாற்றினார்.
வயது முதிர்வு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் கடம்பூர் ஜனார்த்தனன் காலமானார்.
கடம்பூரில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த ஜனார்த் தனன் உடலுக்கு, அமைச்சர் கடம்பூர் ராஜு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னாள் எம்எல்ஏ கருப்பசாமி பாண்டியன், முன்னாள் எம்பிக்கள் அப்பாத் துரை, சிவப்பிரகாசம், முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப் பாண்டியன், முன்னாள் எம்எல்ஏ மோகன், தமிழ் மாநில காங்கிரஸ் வடக்கு மாவட்டத் தலைவர் கதிர்வேல் மற்றும் பல்வேறு கட்சியினர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் காலை 11.30 மணிக்கு கடம்பூரில் உள்ள தோட்டத்தில் ஜனார்த்தனனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
அமைச்சர் கடம்பூர் ராஜு கூறும்போது, ‘‘மறைந்த கடம்பூர் எம்.ஆர்.ஜனார்த்தனன் திராவிட பாரம்பரியத்தின் மூத்த தலைவராக விளங்கினார். தனது அரசியல் ஆசான் பேரறிஞர் அண்ணாவின் பெயரில் அரசு விருது வாங்க வேண்டும் என்பதை தனது வாழ்நாள் ஆசையாக கொண்டிருந்தார். இதுகுறித்து முதல்வர், துணை முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச்சென்றேன். அவர்களும் இதற்கு பரிந்துரை செய்திருந்தனர். அதற்குள் அவர் மறைந்துவிட்டார். ஒரு அரசியல்வாதி இப்படித்தான் வாழ வேண்டும் என்பதற்கு இலக்கண மாக வாழ்ந்து மறைந்தவர். அவரது இழப்பு அதிமுகவுக்கு மட்டுமல்ல, திராவிட பாரம்பரியத்துக்கு பேரிழப்பு’’ என்றார்.