தூத்துக்குடி மாவட்டத்தில் வாகனங்களை வைத்துள்ள பொது மக்கள் உடனடியாக தங்களது வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள பம்பர்களை நீக்க வேண்டும். தவறும் பட்சத்தில் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
வாகனங்களில் முன்னும் பின்னும் கூடுதலாக பம்பர்கள் பொருத்தப்படுவதால் விபத்து ஏற்படும் போது வாகனத்தில் உள்ள காற்று பைகள் தானாக திறக்க விடாமல் பம்பர்கள் தடுத்து விடுவதால் வாகன ஓட்டுநர் மற்றும் பயணிகள் விபத்திலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. மேலும், வாகனத்தின் சேதத்தையும் கணிசமான அளவில் குறைக்க முடியவில்லை.
காற்றுப் பைகள் பொருத்தப் படாத வாகனங்களிலும் இந்த வகையான பம்பர்கள் பொருத்தப்பட்டிருப்பதால் விபத்தின் போது அதிக அதிர்வுகள் ஏற்பட்டு ஓட்டுநர், பயணிகளின் உயிரைக் காப்பாற்ற இயலாத சூழ்நிலை ஏற்படுகிறது.
எனவே, அனைத்து வகையான மோட்டார் வாகனங்களில் சட்டத்துக்கு புறம்பாக பம்பர்கள் பொருத்தப்பட்ட வாகனங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.
எனவே, தூத்துக்குடி மாவட்டத் தில் வாகனங்களை வைத்துள்ள பொது மக்கள் உடனடியாக தங்களது வாகனத்தில் முன்னும் பின்னும் பொருத்தப்பட்டுள்ள பம்பர்களை நீக்க வேண்டும். தவறும் பட்சத்தில் போக்குவரத்து மற்றும் காவல் துறை அதிகாரிகள் மூலம் அபராத தொகை ரூ.5,000 விதிக்கப்படும். மேலும், வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள பம்பர்களை நீக்க போக்குவரத்து துறை மற்றும் காவல் துறை அதிகாரிகள் வாயிலாக தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.