கருணாநிதியிடம் உள்ள அனைத்துத் திறமைகளும் அழகிரியிடம் உள்ளன என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.
இது குறித்து அவர் மதுரையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
தங்கத்தைத் தோண்டி எடுக்கும் நாடுகளில்கூட தாலிக்குத் தங்கம் வழங்கியது கிடையாது. ஆனால் தமிழகத்தில் மட்டுமே தாலிக்குத் தங்கம் வழங்கப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் கந்து வட்டி, கட்டப் பஞ்சாயத்து ஒழிக்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தல் முடிவுகள் சட்டப் பேரவைத் தேர்தலிலும் எதிரொலிக்கும் என எதிர்பார்ப்பது தவறு. 1980-ல் மக்களவையில் அதிமுக 2 இடங்கள் மட்டுமே பிடித்தது. ஆனால் சட்டப் பேரவையில் அதிமுக ஆட்சியைப் பிடித்தது. அதேபோல் இந்தத் தேர்தலிலும் அதிமுக ஆட்சியைப் பிடிக்கும்.
அழகிரி செயல்பாடு மதுரை மக்க ளுக்கு நன்கு தெரியும். அழகிரி தான் எடுக்கும் கொள்கையில் இருந்து மாறாத நிலைப்பாடு உடையவர். முறையாகத் திட்டங்களை வகுத்து செயல்படுபவர். கருணாநிதியிடம் உள்ள அனைத்துத் திறமைகளும் அழகிரியிடம் உள்ளது.
எதிர்க்கட்சிகளை வளரவிடக் கூடாது என்பதில் கருணாநிதியைப் போன்று செயல்படுபவர். எதிர்க்கட்சியாக இருந்த போது அழகிரியால் நாங்களே பாதிக்கப்பட்டுள்ளோம். அழகிரியைப் புறந்தள்ளிவிட்டு திமுக ஆட்சிக்கு வருவது என்பது நடக்காத ஒன்று. அழகிரி கட்சி தொடங்கினால் திமுகவுக்குப் பாதிப்பு ஏற்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.