இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ரூ.1,000 கோடி மதிப்புள்ள கோயில் நிலத்தை விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலரும், திருத்தொண்டர் பேரவைத் தலைவருமான அல்லிக்குட்டை ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
சேலம் சின்னக்கடை வீதியில் உள்ள வேணுகோபால சுவாமி கோயிலுக்கு கடந்த 1899-ம் ஆண்டு கிருஷ்ணன் என்பவர் சேலம் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள திருவாகவுண்டனூர் பகுதியில் 3.60 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கினார்.
அந்த நிலத்தை தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்து 80-sக்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் 20 கடைகளை கட்டி 80 ஆண்டுகளாக ஆக்கிரமித்துள்ளனர்.
இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத்துறையினர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், கோயிலுக்கு சொந்தமான நிலம் என்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, திருத்தொண்டர் பேரவைத் தலைவர் அல்லிக்குட்டை ராதாகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என மனு தாக்கல் செய்தார். இதையடுத்து, கோயிலுக்கு சொந்தமான இடத்தில் உள்ள 10 கடைகள் அகற்றப்பட்டன.
மேலும், ஆக்கிரமிப்பில் உள்ள 80 வீடுகளுக்கு காவல்துறை மூலம் நீதிமன்ற உத்தரவு ஆணை வழங்கப்பட்டு 15 நாட்களுக்குள் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக திருத் தொண்டர் பேரவைத் தலைவர் அல்லிக்குட்டை ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
சேலம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோயில் ஆக்கிரமிப்பு நிலங்களை நீதிமன்றம் மூலம் மீட்டு, இந்து சமய அறநிலையத் துறையிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். தற்போது, வேணுகோபால சுவாமி கோயிலுக்கு சொந்தமான 3.60 ஏக்கர் நிலம் ஆயிரம் கோடி ரூபாய் வரை மதிப்புடையது. தற்போது, மீட்கப்பட்டுள்ள நிலத்தின் மதிப்பு ரூ.100 கோடி ரூபாய் வரை மதிப்பு கொண்டது. மீதியுள்ள ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து அகற்றிகோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.