Regional01

அஞ்சலகங்களில் நாளை முதல் தங்கப்பத்திரம் விற்பனை அஞ்சல் கண்காணிப்பாளர் தகவல்

செய்திப்பிரிவு

நாமக்கல் மாவட்டத்தில் நாளை முதல் ஜனவரி 1-ம் தேதி வரை அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் தங்கப்பத்திரம் விற்பனை செய்யப்பட உள்ளது, என கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் ப.முருகேசன் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

நாமக்கல் கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் தங்கப் பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது . ஒருவர் ஒரு கிராம் முதல் 4 ஆயிரம் கிராம் வரை வாங்கலாம். தங்கப்பத்திரத்தின் முதலீட்டு காலம் 8 ஆண்டுகளாகும். 8 ஆண்டுகள் இறுதியில் அன்றைய தேதி மதிப்பில் தங்கப்பத்திரங்களை பணமாக மாற்றிக்கொள்ளலாம். தேவைப்படின் 5 ஆண்டுகள் முடிந்த பிறகு தங்கப்பத்திரத்தை பணமாக மாற்றிக்கொள்ளலாம்.

இந்த திட்டத்தின் மூலம் செய்யப்படும் முதலீட்டிற்கு மத்திய ரிசர்வ் வங்கி மூலம் 2.5 சதவீதம் ஆண்டு வட்டி கணக்கிட்டு ஒவ்வொரு 6 மாதத்திற்கும் முதலீட்டாளர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இந்த திட்டம் நாளை முதல் (28-ம் தேதி) ஜனவரி 1-ம் தேதி வரை அனைத்து அஞ்சலகங்களிலும் செயல்படுத்தப்படும். இதில் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அஞ்சலகங்களில் தங்கப்பத்திரத்தில் பணம் செலுத்துபவர்களுக்கு அஞ்சலக ரசீது வழங்கப்படும். ஏறத்தாழ 20 நாட்களுக்கு பிறகு தங்கப்பத்திரம் வழங்கப்படும். முதலீடு செய்ய விரும்புபவர்கள் அஞ்சல் அலுவலகங்களையோ அல்லது வணிக வளர்ச்சி அலுவலர்களையோ தொடர்பு கொள்ளலாம். முதலீடு செய்பவர் ஆதார் எண், பான் கார்டு மற்றும் வங்கிக் கணக்கு எண் கட்டாயம் கொண்டுவர வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT