கிருஷ்ணகிரியில் பொங்கல் தொகுப்பில் வழங்கப்படும் கரும்பை குறைவான விலைக்கு கேட்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.
தமிழக அரசு அரிசி பெறும் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பாக, ரூ.2500, பச்சரிசி, சர்க்கரை, முந்திரி, உலர்ந்த திராட்சை, ஏலக்காய், கரும்பு ஆகியவற்றை வழங்க உத்தரவிட்டுள்ளது. இதில், கரும்பினை விவசாயிகளிடம் கூட்டுறவுத்துறை அலுவலர்கள் கொள்முதல் செய்கின்றனர். இந்நிலையில் நேற்று கிருஷ்ணகிரி வட்ட வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்துக்கு வந்த விவசாயிகள் சிலர், பொங்கல் கரும்பினை அரசு நிர்ணயம் செய்த விலையைவிட குறைந்த விலைக்கு அதிகாரிகள் கேட்பதாக குற்றம் சாட்டினர்.
இதுதொடர்பாக விவசாயிகள் கூறும்போது, ‘‘அரசு ரேஷன் கார்டுதாரர்களுக்கு தோராயமாக 5 அடி நீளமுள்ள முழு நீள கரும்பு வழங்க வேண்டும் என்று கூறியுள்ளது. அதிகாரிகள் எங்களிடம் ஒரு கரும்பு ரூ.23 என்ற விலைக்கு கேட்கின்றனர். இதனால் எங்களுக்கு இழப்பு ஏற்படுகிறது. எனவே, அரசு அறிவித்த விலையான கரும்புக்கு ரூ.30 வழங்க வேண்டும்,’’ என்றனர்.
இதுதொடர்பாக கூட்டுறவுத்துறை அலுவலர்கள் கூறும்போது, ‘‘அரசு கரும்பு விலை மற்றும் போக்குவரத்து செலவு (வாகன வாடகை) உட்பட ரூ.30 என நிர்ணயம் செய்துள்ளது. அந்த அடிப்படையில் வாடகை தனியாகவும், விலை தனியாகவும் நிர்ணயம் செய்கிறோம். இதனை விவசாயிகள் பலர் ஏற்றுக் கொண்டனர். ஆனால், சிலர் மட்டுமே கூடுதல் விலை கேட்கின்றனர்,’’ என்றனர்.