தஞ்சாவூர் மாவட்டத்தில் தாளடி பருவ நெல் நாற்றங்கால் மற்றும் நடவுப் பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதற்கான விதைகள் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் விதை விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ஒரத்தநாட்டில் செயல்பட்டு வரும் தனியார் விதை விற்பனை நிலையத்தில், விதை இருப்பு குறித்து கோவை விதைச்சான்று இயக்குநர் சுப்பையன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது, உரிமம் பெற்ற விற்பனையாளர்களிடம் ரசீது பெற்று விதைகளை வாங்கி பயன்படுத்த வேண்டும் என விவசாயிகளிடமும், உரிமம் பெறாமல் விதைகளை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விதை விற்பனையாளர்களிடமும் அவர் அறிவுறுத்தினார். ஆய்வின்போது, தஞ்சாவூர் விதை ஆய்வு துணை இயக்குநர் வித்யா மற்றும் தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்ட விதை ஆய்வாளர்கள் உடனிருந்தனர்.