தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் அறிக்கை: தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் இந்திய கடல் எல்லையைக் கடந்து மீன்பிடி தொழில் புரிவதால் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்படுவதும், துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளாவதுமான நிலை ஏற்படுகிறது. தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் இந்திய கடல் எல்லை கடந்து மீன்பிடி தொழில் புரியும்போது, சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டறிய முடியாத நிலை ஏற்பட்டு, சமூக விரோதிகள் தப்பிக்கும் வாய்ப்பு உருவாகிறது. மேலும், கடல் எல்லை கடந்து மீன்பிடி மேற்கொள்ளும் போது, இந்திய - இலங்கை கடல் எல்லையில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட வாய்ப்பு உருவாகிறது. எனவே, தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் இந்திய கடல் எல்லையைக் கடந்து மீன்பிடி தொழிலில் ஈடுபடக் கூடாது.
இதனை மீறி மீன்பிடி தொழில் மேற்கொள்ளும் படகுகளுக்கு முதல் மூன்று முறை ரூ.1000, ரூ.2500, ரூ.5000 என அபராதம் விதிக்கப்படும். நான்காவது முறை எல்லை கடந்து மீன்பிடி மேற்கொள்ளும்போது ஒரு வார காலத்துக்கு மீன்பிடி தொழில் புரிய தடை விதிக்கப்படும். நான்கு முறைகளுக்கு மேல் எல்லை கடந்து மீன்பிடி மேற்கொள்ளும் போது படகு உரிமம் ரத்து செய்யப்பட்டு, தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983-ன் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.