நகரும் மருத்துவமனை திட்டத்தின் மூலம் தொலை தூரத்தில் உள்ள சிறிய கிராமங்களுக்கும் மருத்துவ சேவைகள் வழங்கப்படுகிறது என அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் முதலமைச்சரின் மருத்துவ முகாம் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த குன்னத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்றது. ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தார். மருத்துவ முகாமை தொடங்கி வைத்து இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசும்போது, “முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தில் தமிழகத்தில் உள்ள ஏரி, குளங்கள், குட்டைகள் நிரம்பி வருகின்றன. ஆரணி சட்டப் பேரவைத் தொகுதியில் மட்டும் ரூ.30 கோடி மதிப்பில் நடைபெற்ற குடிமராமத்து பணிகளால் 90 சதவீதஏரிகள் நிரம்பியுள்ளன. இதன் மூலம் விவசாயம் மற்றும் குடிநீர் தேவை முற்றிலும் நிவர்த்தி அடைந் துள்ளது.
குன்னத்தூரில் நடைபெறும் மருத்துவ முகாமில் ரத்த அழுத்தம், பொது மருத்துவம், இதயநோய், சர்க்கரை நோய், கர்பப்பை புற்று நோய், மகளிர் சிறப்பு மருத்துவம், பல் மருத்துவம், கண், காது, மூக்கு பாதிப்பு, குழந்தைகள் நலப்பிரிவு, யானைக்கால், மலேரியா, எலும்பு – மூட்டு மருத்துவம், பொது அறுவை சிகிச்சை மற்றும் சித்த மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்படும். இசிஜி, ஸ்கேன் பரிசோதனையும் செய்யப்படவுள்ளது. அனைத்து நோய்களுக்கும் சிறப்பு மருத்து வர்கள் மூலம் இலவச சிகிச்சை அளிக்கப்படும்.
முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டத்தின் மூலம் கர்ப்பிணிகளுக்கு ரூ.18 ஆயிரம் உதவித் தொகை மற்றும் ஜனனி சுரக் க்ஷா யோஜனா திட்டத்தின் மூலம் அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் பெண்களுக்கு ரூ.700 உதவித் தொகை வழங்கப்படும். மேலும், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவிக்கும் தாய்மார்களுக்கு 3 நாட்கள் இலவச உணவு வழங்கப்படுகிறது.
நகரும் மருத்துவமனை திட்டத்தின் மூலம் தொலை தூரத்தில் உள்ள சிறிய கிராமங்களுக்கு சென்று நடமாடும் மருத்துவக் குழுவினர் மருத்துவ சேவைகளை வழங்கி வருகின்றனர். கண்ணொளி காப்போம் திட்டத்தின் மூலம் பள்ளி மாணவர்களுக்கு கண்ணாடி வழங்கப்படுகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் முதற்கட்டமாக 23 கிராமங்களில் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக் திறக்கப்பட்டு வருகிறது” என்றார்.
பின்னர் அவர், கர்ப்பிணிகளுக்கு அம்மா மகப்பேறு ஊட்டச்சத்து பெட்டகம் மற்றும் தாய்மார்களுக்கு அம்மா குழந்தை நல பரிசுப் பெட்டகத்தை வழங்கினார். இதில், சுகாதாரத் துறை துணை இயக்குநர் மருத்துவர் அஜிதா உட்பட பலர் கலந்துகொண்டனர்.