சிவகங்கை மாவட்டம், மானா மதுரையில் சீரமைப்புப் பணிக்காக வாரச்சந்தை வளாகம் மூடப்பட்டது. இதனால் வைகை ஆற்றுக்குள் வியாபாரிகள் கடைகள் அமைத்து வியாபாரம் செய்தனர்.
மானாமதுரையில் வாரந் தோறும் வியாழக்கிழமை சந்தை நடக்கும். திருப்புவனம், திருப்பாச்சேத்தி, மதுரை, இளையான்குடி, மானாமதுரை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள், விவசாயிகள் காய்கறிகள், பழங்களை விற்பனை செய்து வந்தனர்.
இந்நிலையில் வாரச்சந்தையில் இருந்த கடைகள் சேதமடைந்த தால், அவற்றை இடித்துவிட்டு ரூ.2.50 கோடியில் புதிய கடைகள் கட்டும் பணி நடந்து வருகிறது. இதனால் சந்தை வளாகம் மூடப்பட்டது. இதையடுத்து வைகை ஆற்றுக்குள் வாரச்சந்தை நடத்த பேரூராட்சி நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. வியாபாரிகள், விவசாயிகள் ஆற்றுக்குள் கடைகள் அமைத்து நேற்று வியாபாரம் செய்தனர்.
வாரச்சந்தை வளாகம் சீரமைக்கப்பட்டு திறக்கும் வரை ஆற்றுக்குள் சந்தை நடக்கும் என பேரூராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.