கோரிக்கைகள் நிறைவேறா விட்டால் பிப்.3 முதல் தொடர் போராட்டம் நடத்தப்படும், என தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் அறிவித்துள்ளது.
இது குறித்து அமைப்பின் மாநிலப் பொதுச் செயலாளர் எஸ்.சேதுசெல்வம் சிவகங்கையில் செய்தியாளர்களிடம் கூறிய தாவது:
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல் படுத்துவோம் என்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரி யர்கள், அரசு ஊழியர்கள் மீது எடுத்த ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும்.
உயர்நிலைப் பள்ளி யில் பணிபுரியும்பட்டதாரி ஆசிரியர் கள், தமிழாசிரியர்களுக்கு மட்டுமே பணிமூப்பு அடிப்படையில் உயர்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும். ரத்து செய்த உயர் கல்விக்கான ஊக்க ஊதியத்தை திரும்ப வழங்க வேண்டும்.
இக்கோரிக்கைகளை 2021 ஜன.31-க்குள் நிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டால் பிப்.3-ம் தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தப்படும்.
பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுநிலை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்கும்போது முதுநிலைப் பட்ட அடிப்படையிலேயே 42 ஆண்டுகளாகப் பதவி உயர்வு வழங்கப்படுகிறது. தற்போது கிராஸ் மேஜர் பெற்றவர்களுக்கு பதவி உயர்வு மறுப்பது நியாமற்றது. டெல்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டத்தை ஆதரிக்கிறோம். அவர்களுக்கு எதிரான மூன்று சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.