Regional01

சேலம் மாவட்டத்தில் 1.95 ஹெக்டேரில் பயிர் சாகுபடி விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் ஆட்சியர் தகவல்

செய்திப்பிரிவு

சேலம் மாவட்டத்தில் நவம்பர் வரை 1,95,302 ஹெக்டேரில் வேளாண் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது என ஆட்சியர் ராமன் தெரிவித்துள்ளார்.

சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் காணொலி மூலம் நடைபெற்றது. ஆட்சியர் ராமன் தலைமை வகித்தார். கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் ராஜேந்திரபிரசாத், வேளாண் இணை இயக்குநர் கணேசன், கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் புருஷோத்தமன், வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் பாலாஜி, தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் சத்யா, சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பொது மேலாளர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விவசாயிகள், அந்தந்த பகுதி வேளாண் உதவி இயக்குநர் அலுவலகங்களில் இருந்து காணொலி மூலம் கூட்டத்தில் பங்கேற்று, வேளாண் சார்ந்த குறைகளை தெரிவித்தனர். கூட்டத்தில் ஆட்சியர் பேசியதாவது:

சேலம் மாவட்டத்தில் பருவமழைக் காலத்தில் ஆண்டு சராசரி மழையளவு 997.90 மிமீ ஆகும். இந்த ஆண்டு பருவமழை காலத்தில் 996.30 மிமீ மழை பெய்துள்ளது. வடகிழக்கு பருவமழை காலத்தில் சேலம் மாவட்டத்தின் சராசரி மழையளவு 370.50 மிமீ ஆகும். இக்காலத்தில் இதுவரை 294.90 மிமீ மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் நடப்பு நவம்பர் வரை 1,95,302 ஹெக்டேரில் வேளாண் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.

நடப்பாண்டில் நெல் 220.610 மெட்ரிக் டன்னும், சிறுதானியங்கள் 52.987 மெட்ரிக் டன்னும், பயறு வகைகள் 179.506 மெட்ரிக் டன்னும், எண்ணெய் வித்துகள் 298.162 மெட்ரிக் டன் விதைகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. யூரியா 21,431 மெட்ரிக் டன்னும், டி.ஏ.பி 8,551 மெட்ரிக் டன்னும், பொட்டாஷ் 10,166 மெட்ரிக் டன் மற்றும் கலப்பு உரங்கள் 18,468 மெட்ரிக் டன்னும் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் தோட்டக்கலைத் துறையின் சார்பில் 65,790.76 ஹெக்டேரில் பழங்கள், காய்கறிகள், வாசனை திரவியங்கள், மலைப்பயிர்கள், மருத்துவப் பயிர்கள், மலர்கள் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பயிர் உற்பத்தியில் 48.492 லட்சம் மெட்ரிக் டன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 11.39 லட்சம் மெட்ரிக் டன் பயிர் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT