தூத்துக்குடியில் மையவாடி இடத்தில் ஸ்டெம் பூங்கா அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என திமுக எம்எல்ஏ பெ.கீதாஜீவன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு அவர் அனுப்பியுள்ள மனு விவரம்:
தூத்துக்குடி மாநகராட்சி 5-வது வார்டுக்கு உட்பட்ட ஹவுசிங் போர்டுக்கு வடபுறம், சுந்தரவேல்புரம் சுடுகாட்டுக்கு தென்புறப் பகுதியில் சுமார் 12 ஏக்கர் நிலம் ஆங்கிலேயர் காலத்தில் மறைவெய்திய மக்களை அடக்கம்செய்வதற்காக 1903-ம் ஆண்டு ஒதுக்கப்பட்டது. சுந்தரவேல்புரம், ஸ்டேட் பாங்க் காலனி, ஹவுசிங் போர்டு காலனி, கிருஷ்ணராஜபுரம், நந்தகோபாலபுரம், அழகேசபுரம், செல்வவிநாயகபுரம், அம்பேத்கர் காலனி பகுதிகளைச்சார்ந்த அனைத்து சாதி மற்றும் மதத்தைச் சார்ந்தமக்கள் இறந்தவா்களை அங்கு அடக்கம் செய்துவருகின்றனர்.
1985-ம் ஆண்டு வரை அதில் தகரக் கொட்டகை அமைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு சமுதாயத்துக்கும் ஒதுக்கப்பட்ட இடத்தை குறிக்க ஊன்றப்பட்ட கல்தூண் இன்று வரை காணப்படுகிறது. கல்லறைகள் ஒவ்வொரு குடும்பத்தாரின் நினைவுச் சின்னமாகும். தற்போது அப்பகுதியில் ஸ்டெம் பார்க் (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் சார் பூங்கா) அமைப்பதற்காக திட்டமிட்டு பணிகளை மாநகராட்சி தொடங்கியுள்ளது.
அங்குள்ள கல்லறைகளை அகற்றுவதற்கு மாநராட்சி முயற்சி செய்து வருகிறது. தூத்துக்குடி வேகமாக வளர்ந்து வரும் தொழில் நகரமாகும். பெருகிவரும் மக்கள்தொகைக்கு ஏற்ப உடல் அடக்கம் செய்யும் இடம்அத்தியாவசியமான ஒன்றாகும். எனவே, ஸ்டெம் பார்க் திட்டத்தை கைவிட்டு, அந்த இடத்தை பொது மையவாடியாக தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.