கோரிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த தம்பதிக்கு 5 குழந்தைகள். அவர்களின் தந்தை இறந்து விட்டார். தாயார் மனநிலை பாதிப்பால் சிகிச்சை பெறுகிறார். இதனால் 5 குழந்தைகளும் உறவினர்களிடம் வளர்கின்றனர். இவர்களில் 15 வயது சிறுமி (4-வது குழந்தை) புதூரில் வசிக்கும் சித்தியிடம் வளர்ந்தார். இந்நிலையில், சமீபத்தில் பி.பி.குளம் பகுதியைச் சேர்ந்த இரு பெண்கள் சிறுமியை அணுகி ஆசை வார்த்தை கூறி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தினர். கோரிப்பாளையம் விடுதி ஒன்றில் அந்த சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
மகளிர் காவல் ஆய்வாளர் ஹேமா மாலா தலைமையிலான தனிப்படையினர் நேற்று காலை சம்பந்தப்பட்ட விடுதியை சோதனையிட்டு சிறுமியை மீட்டனர். மேலும் 5 பெண்களையும் மடக்கி பிடித்தனர். சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பிபி.குளம் பகுதியைச் சேர்ந்த சந்திரா, அனார்கலி உட்பட 5 பேரை தல்லாகுளம் காவல் ஆய்வாளர் புவனேசுவரி கைது செய்தார். மேலும் இருவரைத் தேடுகின்றனர்.