Regional02

காவல் சார்பு ஆய்வாளர் தேர்வுக்கான உத்தேச பட்டியலுக்கு இடைக்கால தடை உயர் நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

காவல் சார்பு ஆய்வாளர் தேர்வுக்கான உத்தேசப் பட்டியலுக்கு இடைக்காலத் தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராமேசுவரத்தைச் சேர்ந்த விக்னேஸ்வரன், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகக் காவல்துறையில் சார்பு ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக 2019 மார்ச் 8-ல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. நான் எழுத்துத் தேர்வில் 70-க்கு 51 மதிப்பெண்கள் பெற்றேன். உடல்திறன் தேர்வில் 15-க்கு 12 மதிப்பெண் பெற்றேன். தேர்வு செய்யப்பட்டோருக்கான உத்தேசப் பட்டியல் டிச. 1-ல் வெளி யிடப்பட்டது. என்னை நேர்முகத் தேர்வுக்கு அழைக்கவில்லை. எம்பிசி பிரிவில் கட்ஆப் மதிப்பெண் 64. நான் கட்ஆப் மதிப்பெண் 63 பெற்றுள்ளேன். தமிழ் வழியில் கல்வி பயின்றவருக்கான இடஒதுக்கீட்டுச் சலுகை எனக்கு வழங்கப்பட்டிருந்தால் நேர்முகத் தேர்வுக்குத் தகுதி பெற்றிருப்பேன்.

எனவே, தமிழ் வழிக்கல்வி சலுகை வழங்கி, அதன் அடிப்படையில் என்னை நேர்முகத் தேர்வுக்கு அழைக்க உத்தரவிட வேண்டும். அதுவரை டிசம்பர் 1-ல் வெளியிடப்பட்ட உத்தேசத் தேர்வு பட்டியலுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். இந்த மனுவை நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு விசாரித்தது. சார்பு ஆய்வாளர் பணிக்கான உத்தேசத் தேர்வுப் பட்டியலுக்கு இடைக்காலத் தடை விதித்த நீதிபதிகள், சார்பு ஆய்வாளர் பணித் தேர்வில் தமிழ் வழியில் கல்வி பயின்றோருக்கான இடஒதுக்கீடுச் சலுகை வழங்குவது தொடர்பாக தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் பதிலளிக்க உத்தரவிட்டனர்.

SCROLL FOR NEXT