சேலம் கிச்சிப்பாளையம் சுந்தரர் தெருவைச் சேர்ந்த செல்லதுரை (35). ரவுடியான இவர் மீது இரண்டு கொலை உள்ளிட்ட 20 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், இவரை கடந்த 9 மாதங்களுக்கு முன்னர் ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் போலீஸார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். கடந்த 15-ம் தேதி சிறையில் இருந்து செல்லதுரை வெளியே வந்தார்.
இவருக்கு இரு மனைவிகள். முதல் மனைவி ஜான்சிராணிக்கு 3 குழந்தைகளும், இரண்டாவது மனைவி சுஜிக்கு 2 குழந்தைகளும் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு கிச்சிப்பாளையம் பகுதியில் செல்லதுரை சென்ற கார் மீது எதிரே வந்த கார் நேருக்கு நேர் மோதியது. அப்போது, காரில் வந்தவர்களும், இருசக்கர வாகனத்தில் வந்தவர்களும் சேர்ந்து செல்லதுரையை அரிவாளால் வெட்டி கொன்று விட்டு தப்பினர்.
இதுதொடர்பாக மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார் உத்தரவின்பேரில் தனிப்படை அமைத்து விசாரித்தனர். விசாரணையில், கிச்சிப்பாளையத்தில் ரவுடிகள் சூரி மற்றும் செல்லதுரை ஆகியோர் இரு பிரிவாக செயல்பட்டதும், சூரியின் மகன் நெப்போலியனை கொலை செய்த வழக்கில் தொடர்புடைய செல்லதுரையை பழிக்கு பழி வாங்க சூரியின் தலைமையிலான கும்பல் செல்லதுரையை கொலை செய்தது தெரிந்தது. தலைமறைவான சூரி உள்ளிட்ட கும்பலை போலீஸார் தேடி வந்தனர்.
இந்நிலையில் இக்கொலை தொடர்பாக சேலத்தைச் சேர்ந்த ராஜமணிகண்டன்(32), விக்னேஷ்(35), பாண்டியராஜ்(31), ரஞ்சித்குமார்(32), மற்றொரு விக்னேஷ்(35), சாணக்யா(26), மணிகண்டன்(29) ஆகிய 7 பேர் கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1-ல் மாஜிஸ்திரேட் சரவணபாபு முன்னிலையில் நேற்று சரணடைந்தனர்.